ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்றைய திகதியில் அதிலும் குறிப்பாக இளவயதினருக்கு உடலின் கைவிரல்களில் மரு தோன்றுகிறது. இது ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் உருவாகிறது. 

இது பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இதன் மையப்பகுதியில் கருப்பு புள்ளி ஒன்று தெரியும்.  சிலருக்கு இந்த மருவானது கையிலோ அல்லது உடலின் வேறு பகுதியில் வராமல் கால் பாதங்களில் ஏற்படக்கூடும். அவர்கள் நடக்க நடக்க மரு தேய்மானம் அடைகிறது. அத்துடன் எம்முடைய உடல் எடையும் அதன் மீது சுமத்தப்படுவதால், கிருமித் தொற்று ஏற்பட்டு, புண்ணாகி விடுகிறது.

இத்தகைய தருணங்களில் மருவை கையினால் அழுத்தினால் அல்லது வேறு ஏதேனும் பொருளைக்கொண்டு தொட்டாலும் வலி கடுமையாக இருக்கும். இதனை சிறிய நிலையில் அல்லது தொடக்க நிலையில் இருந்தால் மருத்துவர்கள் ஒரு வகையினதான அமிலத்தை வெளிப்பூச்சாக பூசி அதனை மறையச் செய்வார்கள். 

சிலருக்கு மரு பெரிதாக இருந்தால், அவர்களுக்கு மருத்துவர்கள் கிரியோதெரபி என்ற சிகிச்சை முறை மூலம் அகற்றி குணப்படுத்துவார்கள். இதன் போது அந்த மருவின் மீது பக்கவிளைவுகள் ஏதும் நேரா வண்ணம் வெப்ப அதிர்வலைகளை அனுப்பி சிகிச்சையை மேற்கொள்வார்கள். 

இதன் பின்னரும் அந்த மருவின் பெரிதாகவும், எளிதில் குணப்படுத்த முடியாததாகவும் இருந்தால் அதற்கு சத்திர சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்துவார்கள். இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இத்தகைய சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலணிகளை குறிப்பிட்ட கால அவகாசம் வரை அணியவேண்டும். அது சிறந்த நிவாரணத்தை அளித்கும். 

அதே சமயத்தில் இது கால் ஆணி அல்ல என்பதையும், காலில் ஏற்பட்ட காய்ப்பு இல்லை என்பதையும், அதில் இருந்து வேறுபட்ட பிரச்சனை என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இதற்கான சிகிச்சையை பெற வேண்டும்.

டொக்டர் தீப்தி

தொகுப்பு அனுஷா,