சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா ,ஜெயப்பிரகாஷ், ஜி.எம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார்.  இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த ‘மௌன குரு’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர். சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படமிது. இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார், பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, சாபு ஜோசப் படத்தை தொகுத்திருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் சாந்தகுமார் பேசுகையில்,“ கிரைம் திரில்லர் ஜோனரில் ‘மகாமுனி’ தயாராகியிருக்கிறது. திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்.” என்றார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.