வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்  -உன் தலைமையிலான குழு இந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டக்  நகருக்கு செல்லும் மேற்படி குழு அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்த சந்திப்பு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற இருக்கிறது.

8 ஆண்டுகளுக்கு முன்பு வட கொரிய ஜனாதிபதியாக இருந்த  கிம் ஜோங் இல், அப்போது ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த திமித்ரி மெட்வதேவ் ஆகியோர் முதன் முதலாக  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால், அதன் பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தற்போதைய நிலையில், கிம் ஜோங் -உன், ரஷ்ய அதிபரை சந்திக்க மிக ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த விவகாரத்தில் இதுவரையில் உறுதியான உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு புத்துயிரூட்டவும், சீனாவுக்கு எதிர்சமநிலையை ஏற்படுத்த வேண்டிய தேவையும் கிம் ஜோங் -உன்னுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.