யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை  சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

குண்டு வெடிப்பு சம்வங்களை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்தது. தீடிரென ஊரடங்கு அமுலுக்கு வந்ததால் ,யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறந்திருந்தோர் , பல்வேறு தேவைகளுக்காக நகர் பகுதிக்கு வந்திருந்தோர் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள். 

இதனால் யாழ் நகர் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார். 

அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் யாழ்,பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதுடன் , வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தமையால் சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.