இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்தியாவின் இராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

நேற்று காலை நாட்டின் சில தேவாலயங்களையும் ஹொட்டல்களையும் குறி வைத்து நடத்திய குண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்த நிலையில் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில். மேலும்  வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள இராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமாக ஹோவர் கிராப்ட், கப்பல் மற்றும் சிட்டா ஹெலிகொப்டரிலும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும் கோவிலுக்குள்ளும் அவ்வப்போது கண்காணிப்பு கருவிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருவதோடு இராமேசுவரம் ரயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..