ஜப்பானைச் சேர்ந்த இரு விழிகள் அற்ற ஒருவர் 12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார்.

ஜப்பானின் குமமோடோ பிராந்தியத்தை சேர்ந்த 52 வயதுடய இவாமேட்டோ என்பவர் அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் வசிந்து வந்தார். 

பார்வை இல்லாத போதும் படகு ஓட்டும் அதீத திறமை கொண்ட இவருக்கு பசிபிக் பெருங்கடலை சுற்றிவர வேண்டும் என்பது நீண்டகால விருப்பம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டார். அப்போது பசிபிக் பெருங்கடலின் பாதி தூரத்தை கடந்துவிட்ட நிலையில், அவரது படகு திமிங்கலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதனால் கனவு நிறைவேறாமல் போனது. 

எனினும் தனது முயற்சியில் விடாப்பிடியாக இருந்த இவர், கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சாண்டியாகோ நகரில் இருந்து, தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார்.

12 மீட்டர் நீளம் கொண்ட தனது படகில் அமெரிக்காவை சேர்ந்த மாலுமியான டக் ஸிமித் என்பவரை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு இவாமேட்டோ, சுமார் 2 மாதத்தில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, ஜப்பானின் புகுஷிமாவை சென்றடைந்தார். 

இதன் மூலம், பசிபிக் பெருங்கடலை கடந்த, முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எனும் பெருமையை இவாமேட்டோ பெற்றுள்ளார்.