ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி கண்காணிப்பில்  நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைபொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகின்றதெனினும் அதன் மறுபக்கம் குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடுமையான கண்காணிப்புகள் , விசாரணைகள், திடீர் சுற்றி வளைப்புகள் , கைதுகள் அதிகரித்துள்ளதால் போதைப்பொருட்களின் விநியோகம் நாட்டின் பல பாகங்களிலும் தடையை எதிர்நோக்கியுள்ளது. அரசாங்கத்தின் தேவையும் அது தான். அதேவேளை போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் தமக்கு அப்பொருட்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தீவிர செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில் பல குற்றச்சம்பவங்களும் கொலை ,கொள்ளை ,பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் அதிகரிக்க சந்தர்ப்பங்கள் உள்ளன. இதற்கு  அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதே இங்கு எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.

இலங்கையில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சராசரியாக இரண்டரை இலட்சம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தொகை சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமென கூறப்படுகின்றது. இது ஒரு சமூகப்பிரச்சினை என்ற அடிப்படையில் போதைக்கு அடிமையானவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  இது குறித்து  வெளிப்படுத்துவதில்லை. அதேநேரம் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை எங்ஙனம் இதிலிருந்து மீட்பது என்பது குறித்த தெளிவுகளையும் பெறாது மிகவும் இக்கட்டான நிலையில் இவர்கள் போதைக்கு அடிமையானவர்களை பராமரித்து வருகின்றனர்.

புனர்வாழ்வு மையங்கள்

போதைக்கு அடிமையானவர்களை ஆற்றுப்படுத்தல் செயன்முறைகளுக்குள்ளாக்கி அவர்களை பழைய நிலைமைக்கு கொண்டுவரும் முயற்சிகளில் பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இவ்வாறான புனர்வாழ்வு மையங்கள் எத்தனை இருக்கின்றன என்பது குறித்து ஆராய வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் இலங்கையின் குறித்த ஒரு பாகத்தில் மாத்திரம் இல்லை என்பது முக்கிய விடயம். ஒன்பது மாகாணங்களில் இவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இவர்களை அடையாளங்கண்டு மீண்டும் அவர்களை பழைய வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் அரசாங்கம் என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது முக்கிய விடயம். ஏனெனில் போதைப்பொருட்களை முற்றாக அழிக்கும் வேகத்தில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து சிந்திப்பதற்கு அரசாங்கத்துக்கு நேரமிருந்திருக்காது.

இதேவேளை தலைநகரில் போதைக்கு அடிமையான பல பாடசாலை மாணவர்களை வசதி படைத்த பெற்றோர் தனிப்பட்ட ரீதியாக வைத்திய ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டு அவர்களை பழைய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் தகாத சகவாசத்தால் போதைக்கு அடிமையான ஏழை  இளைஞர், யுவதிகளை அதிலிருந்து மீட்டெடுக்கப்போவது யார் ?  குறித்த பிரதேசங்களில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண அரசாங்கம் என்ன நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது? அவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்குரிய வசதிகள் குறித்த பிரதேசங்களில் இருக்கின்றனவா ? மனித மற்றும் கட்டிட வளங்கள் உள்ளனவா போன்ற கேள்விகள் எம் முன் நிற்கின்றன.

ஒரே அரச அமைப்பு

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை பற்றி நாம் அறிந்திருப்போம். 1984 ஆம் ஆண்டு கட்டளைச்சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த சபையின் பிரதான இலக்குகள்  என்னவென்றால் ஔடதங்கள் குறித்தான சட்டங்களை உருவாக்குதல், அமுல்படுத்தல், புனர்வாழ்வளித்தல், விழிப்புணர்வு, போதைப்பொருட்கள் பற்றிய ஆபத்து  குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு  நடவடிக்கையை முன்னெடுக்கும் திட்டங்களை அமுல்படுத்தல் , உள்ளூரில் உற்பத்தியாகும் மற்றும் கடத்தி வரப்படும் சட்டவிரோதமான போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது போன்றனவாகும்.

 மேலும் பொலிஸ் திணைக்களம், கல்வி அமைச்சு, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை சுங்க திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்தே இக்கட்டுப்பாட்டுச்சபை இயங்கி வருகின்றது. இச்சபையின் கீழ் இலங்கையில் நான்கு புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் மாத்திரமே இயங்கி வருகின்றன. அவை கொழும்பு (தலங்கம) கண்டி(பேராதனை)  ,காலி(உனவட்டுன) , மற்றும் உரபொல (நிட்டம்புவை ) ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

குறித்த நான்கு நிலையங்களிலும் வருடந்தோறும் சுமார் மூவாயிரம் பேர் வரையில் இலவசமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறுகின்றனர்.  ஆனால் குறித்த நிலையங்களின் அமைவிடங்களை வைத்து இதில் புனர்வாழ்வு பெறுபவர்களில் எந்த இனத்தவர்கள் அதிகம் என்பதை ஊகித்து விடலாம். மேலும் இவ்வாறான புனர்வாழ்வு நிலையங்கள் இருப்பது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த எத்தனைப்பேருக்குத்தெரியும் என்பதுவும் முக்கியமான கேள்வியாகும்.

குறித்த நான்கு மத்திய நிலையங்களிலும் பாதிக்கப்பட்டோர் தங்கி வைக்கப்பட்டே சிகிச்சையளிக்கப்படுகின்றனர். பாதிப்பு நிலைமைகளைப்பொறுத்து  மூன்று மாதங்கள் தொடக்கம் 6 மாதங்கள் வரை ஒருவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. எனினும் சுமார் ஐந்து இலட்சம் பேர் வரையிலான போதைக்கு அடிமையானவர்களைக் கொண்டிருக்கும் எமது நாட்டில் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நான்கு மத்திய நிலையங்கள் போதுமா என்ற கேள்வி நியாயமானதே.

புனர்வாழ்வு நிலையங்களை எவ்வாறு அணுகுவது?

இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டுப்பகுதிகளிலும் இவ்வாறான புனர்வாழ்வு மத்திய நிலையங்களின் தேவை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தமது குடும்ப உறுப்பினர்களில் யாராவது போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீட்சி பெற முடியாது தவிக்கும் போது அடுத்த கட்டம் என்ன என்பது குறித்த எந்த தெளிவுமில்லாது இருக்கின்றனர் மக்கள்.

ஒரு சம்பவம்

நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பிரபல நகரில் போதைக்கு அடிமையான   தனது கணவர் குறித்து பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கச்சென்றிருக்கிறார் இரண்டு பெண் பிள்ளைகளின்  இளம் வயது தாயார் ஒருவர். குறித்த பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுக்கு அவரை அனுப்பியுள்ளனர். எவ்வாறு உங்களது கணவர் இதற்கு பழக்கப்பட்டார் என்று கேட்டதற்கு நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் உள்ள சில ஆட்டோ ஓட்டுனர்களால்  இந்த பழக்கம் ஏற்பட்டது என்று கூறிய அவர் தனது கணவர் வீட்டிற்கு வருவதில்லை என்றும் பிள்ளைகளையும் தன்னையும் கவனிப்பதில்லை என்று இதை ஒரு முறைப்பாடாக எடுக்கும்படி இந்த பெண்மணி கூறியுள்ளார்.

அதற்கு குறித்த பெண் பொலிஸ் அதிகாரியோ கணவர் போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளார் என்பதை முறைப்பாடாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளதுடன் அவரை இந்த பிரிவில் எம்மால் கைது செய்யவும் முடியாது. அவரை எப்படியாவது அழைத்து வாருங்கள் நாம் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த பெண்ணும் தொடர்ந்து ‘எனது கணவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகக் காரணமானவர்களின் பெயர்களை கூறினேன் அல்லவா அவர்களை அழைத்து விசாரணை செய்யுங்கள் என் போன்ற பல தாய்மார்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்   ’ என்று கூறியுள்ளார். அதற்கு அங்கு எவ்வித பதில்களும் கூறப்படவில்லை.  ஏமாற்றத்தோடு வெளியே வந்த அந்த பெண்மணி தனது குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு  போராடி வருகின்றார்.

இது ஒரு சம்பவமே ஆனால் இப்படி தீர்வுகள் தெரியாது போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் எத்தனை ஆயிரமோ. குடும்பங்களில் இந்த நிலைமை என்றால் போதை பாவனை மற்றும் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுமந்து சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்களின் நிலைமை அதை விட பரிதாபகரமானதும் ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. போதை பாவனையை விட முடியாது இருக்கும் பலருக்கு உணவுப்பொதிகளில் அவற்றை மறைத்துச் சென்று கொடுக்கும் சம்பவங்கள் பற்றி நாம் ஊடகங்களின் வாயிலாக அறிந்து வருகிறோம். ஒரு சில இடங்களில் தாய்,தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களே இவ்வாறு போதை பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறைகளில் சென்று கொடுத்தும் விநியோகித்தும் வருகின்றனர்.

இவர்களுக்குத் தேவை என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தமது குடும்ப உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. இந்த மனநிலையே போதைக்கு அடிமையானவர்களை தொடர்ச்சியாக அதில் தக்க வைக்க உதவுகிறது. இலங்கையில் போதை பாவனை மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு சிறைச்சாலைகளுக்குள்ளேயே ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகள் இல்லாமலில்லை. ஆனால் அது எல்லா சிறைச்சாலைகளிலும் இல்லை என்பதே முக்கியம்.

அதுவும் சிறைச்சாலை காவலர்கள் அதிகாரிகளே பணத்துக்காக இவ்வாறு சிறைச்சாலைக்குள் போதை பொருட்களை அனுமதித்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு இதிலிருந்து மீட்சி பெறுவது என்பது குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இங்கு போதை பொருட்களை கொண்டு வருபவர்களை விட அதை விநியோகிப்பவர்களையே அரசாங்கம் அடையாளம் காண வேண்டியுள்ளது. சிறைக்காவலர்களையும் அதிகாரிகளையும் மீறி கைதிகளிடம் எவ்வாறு இவை செல்கின்றன என்ற விசாரணைகள் அவசியம்.

அதே போன்று பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்றிட்டங்களை  அரசாங்கம் உடனடியாக முன்னெடுத்தல் வேண்டும். போதை பொருட்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளால் அதை பாவிப்பவர்கள் வேறு தெரிவொன்றுக்குச் செல்லலாம். அதை பெறுவதற்கு அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடலாம். அது இவர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

ஆகவே ஜனாதிபதி ஒரு பக்கம் போதை பொருட்களை கட்டுப்படுத்துவதில் பயணத்தை ஆரம்பித்துள்ளார் என்றால் அதனால் ஏற்படும் ஏனைய விளைவுகள் குறித்து ஆராய உரியோரை நியமிக்க வேண்டும். மட்டுமன்றி தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் மூலம் மாவட்டங்கள் தோறும் புனர்வாழ்வு மையங்கள் அல்லது ஆலோசனை மையங்களையாவது விஸ்தரிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

- சிவலிங்கம் சிவகுமாரன்