தனது சொந்த ஊரில் வைத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்ளும் டெல்லி கெபிட்டல்ஸ் , இன்றைய போட்டியில் வெற்றிபெற்று மீள் எழுச்சிபெறுமா என டெல்லி ரசிகர்களின் கனவாகவுள்ளது.

ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 37 ஆவது போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் ஒன்றையொன்று சந்திக்கின்றன.

இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி டெல்லியில் இடம்பெறவுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அஸ்வின் தலைமை தாங்கும் அதேவேளை, டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கு  ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை தாங்குகின்றார்.

இதுவரை இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன.

தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங், ஆலோசகர் சவுரவ் கங்குலி ஆகியோரின் பட்டை தீட்டுதலில் இந்த சீசனில் எழுச்சியுடன் விளையாடி வரும் டெல்லி கெபிட்டல்ஸ் அணி உள்ளூரில் மட்டும் தடுமாறுவது ஆச்சரியம் அளிக்கிறது. 

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இதுவரை விளையாடியுள்ள  4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. எஞ்சிய ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டி சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவர் வரை போராடியே கிடைத்தது. 

ஆனால் வெளியூர் ஆடுகளங்களில் (5 போட்டிகளில் 4–ல் வெற்றி) கலக்குகிறார்கள். டெல்லி ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாக காணப்படுகிறது. ஏற்கனவே இதை மோசமான பிட்ச் என்று ரிக்கிபாண்டிங் விமர்சித்தார். ஷிகர் தவான், பிரித்வி ஷா, பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பொறுமையுடன் நிலைத்து நின்று ஆடினால் சாதிக்கலாம். அது மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்.

டெல்லி அணியை போன்றே கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. ஏற்கனவே டெல்லிக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் 14 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி கண்டிருந்தது. துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெய்ல் (26 சிக்சருடன் 352 ரன்), லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 4 அரைசதத்துடன் 387 ரன்) மயங்க் அகர்வால் (225 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அஸ்வின், முருகன் அஸ்வின், முஜீப் ரகுமான் ஆகியோரின் சுழல் ஜாலமும் பஞ்சாப் அணிக்கு பக்கபலமாக இருப்பதால், மறுபடியும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.