மும்பை அணியின் வெற்றி நடையை கட்டுப்படுத்தும் முனைப்புடன் ராஜஸ்தான் அணி இன்றையதினம் களமிறங்கவுள்ளது.

ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 36 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்று மாலை குறித்த போட்டி ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவதுடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ரஹானே தலைமைதாங்குகின்றார். 

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 6 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளியுடன் 7 ஆவது இடத்தில் இருக்கிறது.  எஞ்சிய 6 ஆட்டங்களில் குறைந்தது 5இல் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். 

ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலைமையில் அடுத்த வாரத்தில் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் நாடு (இங்கிலாந்து) திரும்பி விடுவார்கள். 

துடுப்பாட்ட வீரர்கள் கைகொடுக்காததால் தான் ரோயல்ஸ்தான் ரணகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் சுமித்தும் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே மும்பை அணியை அவர்களது இடத்திலேயே 188 ட்டங்கள் என்ற இலக்கை விரட்டிப்பிடித்திருப்பது ராஜஸ்தானுக்கு சற்று நம்பிக்கை அளிக்கிறது. அதே வேகத்துடன் சொந்த ஊரிலும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

பலம் வாய்ந்த அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு மும்பை அணியால் முன்னேற முடியும். மும்பை துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்திலும் இறுதியிலும் அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்கள். 

ஆனால் நடுவரிசையில் ரன்ரேட் மந்தமாகி விடுகிறது. எனவே பொல்லார்ட்டை முன்வரிசையில் இறக்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். பந்து வீச்சில் பும்ரா, மலிங்கா, இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் மிரட்டுகிறார்கள். துடுப்பாட்டத்தில் பாண்ட்யா சகோதரர்கள், அணித் தலைவர் ரோகித் சர்மா, குயின்டான் டி கொக், பொல்லார்ட் சூப்பர் போர்மில் உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, மும்பை அணியின் கையே கொஞ்சம் ஓங்கி நிற்கிறது.