ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான காரின் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வந்து செல்வதால் ரயில் நிலையம் அமைந்துள்ள வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று குறித்த வீதியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதன்போது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் நசுங்கினர். அதன் பின்னரும் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் ஒரு குப்பை லொரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கோர விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும் அவரது 2 வயது பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.