(நா.தனுஜா)

அநுராதபுரத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள மெதடிஸ்த தேவாலயத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை பி.ப 2 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரை அமைதி எதிர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது சிலரால் கற்கள் மற்றும் நெருப்புப் பந்தங்களை வீசித்தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தேவாலயத்திற்குள் ஆராதணைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளியேறாதவாறு கதவு தாழிடப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் தற்போது பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இந்நிலையிலேயே கிறிஸ்தவர்களுக்கு முக்கிய தினமான பெரிய வெள்ளியை முன்னிட்டு மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமைதி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 'மத விடுதலை எங்கே?, மத விடுதலையைப் பெற்றுத்தாருங்கள், சிறந்த அரசியல் கலாசாரத்தின் மூலமாக மதவிடுதலையைப் பெற்றுத்தாருங்கள்" உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வணக்கத்திற்குரிய சதீஷ் கூறுகையில், அநுராதபுரத்தில் சுதந்திரமான மத வழிபாட்டிற்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைதியான முறையில் எமது எதிர்ப்பை வெளியிடும் நோக்கிலேயே இங்கு கூடியிருக்கின்றோம். இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், தமது வழிபாட்டினை மேற்கொள்வதற்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தெஹிவளை பள்ளிவாசலில் இருந்து கலந்துகொண்டிருந்த மொஹமட் பஷீர் குறிப்பிடுகையில்,

நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கு இடையிலும் ஒற்றுமை காணப்படவேண்டும். மதங்களால் ஒருபோதும் வேற்றுமை ஏற்படுவதில்லை. இந்த அழகிய நாட்டை மத வேற்றுமைகளால் ஏற்படும் முரண்பாடுகளைக் கொண்டு சீர்குலைத்து விடக்கூடாது என்றார்.