(நா.தனுஜா)

எல்லை கடந்த செய்தியாளர்கள் அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான உலக ஊடக சுதந்திரக் குறிகாட்டியின்படி இலங்கை 126 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதுடன் கடந்த ஆண்டை விடவும் இம்முறை 5 இடங்கள் முன்னேறியிருக்கின்றது.

உலகலாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 180 நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லை கடந்த செய்தியாளர்கள் அமைப்பினால் வருடாந்தம் உலக ஊடக சுதந்திரக் குறிகாட்டி கணிக்கப்படும். 

அந்த வகையில் கடந்த வருடத்திற்கான உலக ஊடக சுதந்திரக் குறிகாட்டியின் பிரகாரம் 131 ஆவது இடத்திலிருந்த இலங்கை, இவ்வருடத்திற்கான குறிகாட்டியின்படி 5 இடங்கள் முன்நோக்கி நகர்ந்து 126 ஆம் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.

 இது ஊடக சுதந்திரம் தொடர்பில் கடந்த காலங்களில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது குறித்து எல்லை கடந்த செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சில மாதங்களிலேயே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த கழித்து 2005 தொடக்கம் 2015 வரையான இருண்ட தசாப்தகாலத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார். 

அதன்படி ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மேலும் பல ஊடகவியலாளர்கள் மீதான கொலை தாக்குதல் சம்பவங்கள் பற்றிய முன்னேற்றகரமான விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலக ஊடக சுதந்திரக் குறிகாட்டியின்படி முதல் மூன்று இடங்களையும் முறையே நோர்வே,பின்லாந்து,சுவீடன் ஆகிய நாடுகள் பெற்றுக்கொண்டிருப்பதுடன் 180 ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.