இந்தியாவில், வாக்களித்து விட்டு, வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சித்திரை திருவிழா ஒரு பக்கம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரை உசிலம்பட்டி பகுதியை அடுத்த  துரைச்சாமிபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர் முத்துப்பிள்ளை என்ற மூதாட்டி, மாலை அதே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றுள்ளார்.

தனது ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு வெளியே வரும்போது மிகுந்த பதற்றம் அடைந்து அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது.

அப்போது அங்கிருந்த நபர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்தும், எதுவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர், அவர் இறந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனால், வாக்களித்து தனது கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டி மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.