இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார்.

வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஒழுங்கமைத்துள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வவுனியா வந்துள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்காக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை கலைஞர் கடின உழைப்பாளிகள். குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை பாடகர்கள் உட்பட அனைத்து துறைகளிற்கும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளது. 

ஆனால் இலங்கையில் அது குறைவாகவுள்ளதுடன் இங்குள்ள கலைஞர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதற்கும், தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்கும் கஸ்டப்படுகின்றனர். 

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிற்கு நான் முன்பு வந்திருக்கிறேன், அப்பொழுது இங்குள்ள கலைஞர்களின் திறமைகளை பாத்திருக்கிறேன். இங்கு சிறந்த கலைஞர்கள் மட்டுமன்றி சிறந்த விளையாட்டடு வீரர்களும் உள்ளார்கள். 

இங்குள்ள கலைஞர்கள் மிகவும் திறமையாக செயற்படுகின்றார்கள். 

எனவே இங்குள்ள ஊடகங்கள் அவர்களிற்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் அனைவரும் அவர்களுக்காக கண்களை திறந்து பாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். 

இலங்கையில் நிறைய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் கலைஞர்களும் மக்களுடன் மக்களாக இருந்திருக்கிறார்கள். அப்பொழுது இம்மக்களிற்காக குரல் கொடுத்திருந்தோம்.

 இவர்களை காப்பாற்றுவதற்காகவும் இவர்களை தூக்கி விடுவதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இருந்தும் அது சில சமயங்களில் பயனில்லாமல் பயனற்றதாகவே போயுள்ளது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது என தெரிவித்தார்.