சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு பாராளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை  நமது அரசியல்வாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக இன்று அவர் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏமாற்று அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தமது ஏமாற்று அரசியலைச் செய்து பிழைப்பு நடாத்த முடியாது.

அரசியலில் 25, 30 வருடங்களாக இருந்து வருகின்றோம் என்று பிதற்றித் திரிகின்ற அரசியல்வாதிகள் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை எதிர்வருகின்ற அரசியல் களம் நன்கு உணர்த்தும்.சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்களுக்குத் துரோகத்தையே செய்து வந்திருக்கின்றார்கள்.

ஒரு புறம் இனவாதம், மறுபுறம் சுயநலம் இந்த இரண்டு வகையான அரசியல் துரோகங்களில் முஸ்லிம் சமூகம் சிக்கியுள்ளது.

எந்தத் தேர்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் வரலாம் என்கின்ற தளம்பல் நிலையில்தான்  நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.அது மாகாண சபைத் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம்.

முஸ்லிம் சமூக அரசியல் ஒரு சிறு விடயத்தைக் கூட பாராளுமன்றத்திலே சாதிக்க முடியாத நிலைமையை எண்ணி வருத்தப்பட வேண்டியுள்ளதோடு இதனை மாற்றியமைக்க வேண்டியது பற்றி சமூகம் விரைவாகச் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உத்தரவாதம், உரிமைகள், பாதுகாப்பு, இருப்பு என்பன கேள்விக் குறியாகிவிடும்” என்றார்.