(ஆர்.விதுஷா)

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக அந்த தொழிற்சாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இத்தீவிபத்து இன்று வியாழக்கிழமை(18.04.2019) அதிகாலை 3மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மஹரகம - இல 113 கெபானம, பன்னிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள, நான்கு மாடிகளை கொண்ட கடதாசிப்பை உற்பத்தி செய்யும் தொழில்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

அதனையடுத்து கோட்டே தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ நகரசபை தீயணைப்பு படையினர், பொலிசார் , பிரதேசவாசிகள் இணைந்து ஒருவாறாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் தொழிற்சாலை தீக்கிரையாவதை முற்று முழுதாக தடுக்க முடியவில்லை . அத்துடன் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

 மேலும், குறித்த தீப்பரவலுக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் மஹரகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.