ஐதராபத் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க தடுமாறிய சென்னை சுப்பர் கிங் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற, வோர்ணர்,  பேர்ஸ்டோவின் அதிரடியில் சென்னையின் கனவுகளை தவிடுபொடியாக்கிய ஐதரபாத் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். 12 தொடரின் 33 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

வெற்றிப்பயணத்தை நீடித்து, அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே–ஆப்) முதல்அணியாக உறுதிசெய்யும் ஆர்வத்துடன் சென்னை இப் போட்டியில் களமிங்கியது.

சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா தலைமைப் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் காப்பாளர்  சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். 

இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர். 

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணித்தலைவர் ரெய்னா முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார். 

இதன்படி ஷேன் வொட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். 

வலுவான அடித்தளம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ஓட்டங்களை (9.5 ஓவர்) திரட்டினர். இதில் பிளிஸ்சிஸ் அடித்த ஒரு சிக்சர் தொடரின் 400 ஆவது சிக்சராக பதிவானது. வொட்சன் 31 ஓட்டங்களுடுன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணி எப்படியும் 160 ஓட்டங்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. பிளிஸ்சிஸ் 45 ஓட்டகளுடன் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சுழலில் சென்னை அணி தடம் புரண்டது. அவர், பொறுப்பு அணித் தலைவர் சுரேஷ் ரெய்னா (13 ரன்), கேதர் ஜாதவ் (1 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். 

இதனால் ஓட்டவேகம் ஒரேயடியாக மந்தமானது. அடுத்து வந்த சாம் பில்லிங்சும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 6 ஓவர்களில் பந்து இரண்டு முறை மட்டுமே எல்லைக்கோடு பக்கம் சென்றது. 

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அம்பத்தி ராயுடு 25 ஓட்டங்களுடனும் ரவீந்திர ஜடேஜா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வோர்னர் அதிரடி காட்டினார். 24 பந்துகளில் தனது 41-ஆவது அரைசதத்தை எட்டிய அவர் 50 ஓட்டங்களுடன் (25 பந்து, 10 பவுண்டரி) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த அணித் தலைவர் வில்லியம்சன் (3 ரன்), விஜய் சங்கர் (7 ரன்), தீபக் ஹூடா (13 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் அதனால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ஓட்டங்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றியாகும்.