முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும்‘ தர்பார்’ படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரனின் வாரிசும், இயக்குனருமான ஜோன் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில்  நடிக்கிறார்.

விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியவர் ஜோன் மகேந்திரன். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘தர்பார் ’ படத்தின் கதை விவாதத்தில் பங்குபற்றிய நிலையில் இவருடைய தந்தையும், மூத்த இயக்குனருமான மகேந்திரன் மறைந்தார். 

இயக்குனர் மகேந்திரன் மீது அளவுகடந்த மரியாதையும், பக்தியும் வைத்திருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் இயக்குநர் மகேந்திரனுக்கு ஏதேனும் ஒரு வகையில் நன்றி கடன் செய்யவேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்பொழுது ‘தர்பார் ’படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ஜோன் மகேந்திரன். 

தெறி, நிமிர், பேட்ட ஆகிய படங்களில் நடித்து மகேந்திரன்  புகழ் பெற்றதைப் போல், அவரது வாரிசான ஜோன் மகேந்திரன் நடிகராகத் தொடங்கியிருக்கும் இந்த திரையுலக பயணம் வெற்றிப் பெறவேண்டும் என்று அவரது தந்தையின் ரசிகர்களும் பிரார்த்திக்கிறார்கள்.  

இந்த படத்தில் பொலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று தெரிய வருகிறது.. இவர் கௌதம் வாசுதேவ் ஹிந்தியில் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கதையின் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.