(எம்.ஆர்.எம்.வஸீம்)

குவைட் நாட்டுக்கு பணிப்பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துவந்த 26 பெண்கள் இன்று காலை 6,30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ. எல். 230 என்ற விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். 

இவ்வாறு நாடு திரும்பியுள்ள பெண்கள் குவைட்டில் பணிப்பெண்களாக இருக்கும்போது பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களின் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய நிலையில், குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு சொந்தமான பாதுகாப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு நாடுதிரும்பிய 26 பெண்களில் இரண்டு பேர் 1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை அங்கு பணிபுரிந்துள்ளதுடன், ஏனைய 24 பேரும் ஒரு வருடத்துக்குக் குறைவான காலமே குவைட்டில் பணி புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்கள் தற்காலிக கடவுச்சீட்டில், தங்கள் சொந்த பணத்தில் விமான டிக்கட்டுகளை பெற்றுக்கொண்டே நாடுதிரும்பியுள்ளனர்.

மேலும் நாடு திரும்பிய இவர்களில் 05 பேர் அங்கு முகம்கொடுத்த பல்வேறு இன்னல்கள், கொடுமைகள் காரணமாக நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான பஸ் கட்டணங்களுக்கான செலவுகள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் வழங்கப்பட்டுள்ளன.