நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக 39 பாகை செல்சியஸ்சுக்கும் அதிகமான வெப்பநிலை நீடித்து வருவதனால் கடுமையான வறட்சி நிலை நீடிக்கின்றது. 

கிணறுகள், குளங்களின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளமையால் மக்களது தோட்டப் பயிற்செய்கை, நெற்செய்கை என்பன பாதிப்படைந்துள்ளன. பலரது தோட்டங்கள் கடும் வறட்சியினால் பாதிப்புற்று அழிவடைந்து காணப்படுவதனால் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் நீர் இன்றியும், மேய்சல் புற்தரைகளின்றியும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன் வெப்பம் காரணமாக நோய்த் தாக்கத்திற்கும் உள்ளாகி வருகின்றன. 

வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர், சிறிநகர் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு காணப்படுவதனால் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பன தினமும் அம் மக்களுக்கான குடி நீரினை வழங்கி வருகின்றனர். 

இதேவேளை, வெப்ப காலநிலை காரணமாக மக்களது நடமாட்டமும் மதிய வேளைகளில் வீதிகளில் மிகக்குறைவாகக் காணப்படுகின்றது.