மத்திம வயதில் உள்ளவர்களுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது என வைத்தியர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். 

இதனை கண்டறிய தற்போது ஈசோபேசியல் காஸ்ட்ரோ டியோடினோஸ்கோபி  ( oesophago gastro duodenoscopy) என்ற கருவி மூலம் உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக கண்டறிந்து உறுதி செய்ய முடியும். 

புளித்த ஏப்பம், பசியின்மை, நெஞ்செரிச்சல், அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உண்டாகும்.  சிலருக்கு உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இது சிலருக்கு தற்காலிகமாகவும் இருக்கும். சிலருக்கு நிரந்தரமாகவும் இருக்கும். நிரந்தரமாக ஏற்படும்போது தான் புற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். இதற்கு மேற்கண்ட கருவி மூலம் பரிசோதனை செய்து, புற்று நோயின் பாதிப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவசியப்பட்டால் பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.

புற்றுநோயின் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால், சத்திர சிகிச்சையின் மூலமாகவே இதனை குணப்படுத்த இயலும். இரண்டாம் நிலையில் இருந்தால் சத்திரசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்திவிடலாம். சிலருக்கு ஸ்டென்ட் எனப்படும் செயற்கை குழாய் பொருத்தி, உணவு விழுங்குவதில் ஏற்படும் சிரமத்திற்கு நிவாரணம் அளிக்கவேண்டியதிருக்கும்.