பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள சுமார் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் நோட்ரே டோம் தேவாலயம்,  பாரம்பரிய சின்னமாக திகழ்கின்றது.

குறித்த தேவாலயத்தில்,  உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த  தீவிபத்தால் குறித்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. மெதுமெதுவாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்து விழும் அளவுக்கு பெரும் சுவாலையாக எரிந்தது. 

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும்  ஊசிக் கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.

பிரான்சில் நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகெங்கிலும் பெரும் சோக அலையை ஏற்படுத்திய நிலையில், உலகம் முழுவதும் இருந்து அந்நாட்டிற்கு ஆதரவு பெருகியுள்ளது.

இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், 

“14 ஆம் நூற்றாண்டு முதல்,  உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன' என அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா தனது டுவிட்டர் பக்கத்தில், 

'நோட்ரே டோம் தேவாலயம் தீயில் எரிந்துக் கொண்டிருக்கும்  புகைப்படங்கள் மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள்  தேவாலயமும் ஒன்றாகும்.   கடந்த 1991 ஆம் ஆண்டு  ஐ.நா.வில் குறித்த தேவாலயம் , உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்பேன்' என பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து யுனெஸ்கோ தலைவரான ஆட்ரி அசூலே கூறுகையில்,

“தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உள்ளுணர்வை ஆழமாக பாதித்துள்ளது. எங்கள் நிறுவனம் இந்த சூழலை தற்போது கண்காணித்து வருகின்றது. பாரிஸ் மக்களுடன் யுனெஸ்கோ எப்போதும் உறுதுணையாக நிற்கும். விலை மதிப்பில்லாத இந்த பாரம்பரியத்தினை மீட்க நாங்கள் என்றும் துணை நிற்போம்' என கூறினார். 

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டரில்,

 "நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்து பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருக்கிறது. விரைந்து செயல்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அதனை அணைக்க முயற்சி செய்யுங்கள்" என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, டிரம்ப் தனது ஆதரவை பிரான்சுக்கு தெரிவித்ததுடன், உலகில் உள்ள மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்று, எந்த நாட்டில் இருந்தாலும் அது உலக மக்களுக்கானது என்றும், இது மிகவும் பயங்கரமான தீ விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகையில், 

‘இயற்கை அழித்துக்கொள்வதும், மனிதம் மீண்டும் தலையீட்டுவதும் இயல்பு. நாம் மீண்டும் நாளைக்காக கட்டி எழுப்புவோம்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேவாலயம் ஒன்றில் பிராத்தனையில் ஈடுபட்டு தனது கவலையையும், பிரெஞ்சு மக்களுக்கான ஆதரவினையும் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன்  இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எமது லேடி லேடி ஆஃப் பாரிஸ் தீ விபத்தில் சிக்கியிருப்பதை மிகுந்த சோகத்துடன் பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி, பிரான்சின் புகழ் பெற்ற நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ, பாரம்பரியம் மிக்க கத்தோலிக்க தேவாலயத்தை மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்களின் உள்ளங்களையும் பாதித்துள்ள நிலையில், தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தேசிய அளவில் நிதி திரட்டும் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்து சர்வதேச உதவியுடன், உலகின் தலைசிறந்த வல்லுநர்கள் உதவியுடன் மீண்டும் தேவாலயத்தைக் கட்டி எழுப்புவோம் என்றுதெரிவித்தார்.

இதேவேளை, நேற்று மாலையே பிரான்ஸ் கோடீஸ்வரர்களில் ஒருவர் ( Francois-Henri Pinault )தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக 100 மில்லியன் யூரோக்கள் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான Bernard Arnault தமது சார்பாக 200 மில்லியன் யூரோ வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Bernard Arnault-ன் LVMH குழுமத்தில் உள்ள சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை பேராலய பணிக்காக ஈடுபடுத்தவும் நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், Ile-de-France பிராந்தியத்தின் தலைவர் Valerie Pecresse பேராலய பணிக்காக 10 மில்லியன் யூரோ நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாரிஸில் உள்ள நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தையடுத்து நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சோகத்தில் வார்த்தையில்லாமல் கண்கலங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த இந்த தேவாலயம் தற்போது பெரும் சேதத்தை சந்தித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேவேளை,  ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோதிக் கலை கட்டட வடிவமைப்புக்கு பெயர் போனது இந்த நோட்ரே டோம் தேவாலயத்தின் கூரைப்பகுதி மரத்தால் ஆனது என்பதால் அது தீயில் முழுவதுமாக எரிந்துவிட்டது.

தேவாலயத்திற்குள் உள்ள சில முக்கிய கலைவண்ணப்பொருட்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் முக்கியமானதாக யேசுவின் தலையில் இருக்கும் விலையுயர்ந்த முள் கிரீடம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரீடம் மட்டுமின்றி அங்குள்ள பல விலையுயர்ந்த கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள என பாரிஸ் மேயர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.  

தேவாலய சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை.

- நன்றி டெய்லி மெய்ல்