(ஆர்.விதுஷா)

நாடளாவிய ரீதியில் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியோரை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளின் போது 499பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முற்பகல் 6மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

இதன் போது 8555 போக்குவரத்து தொடர்பான வழக்குகள் பதிவாகியள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன்,கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1270 பேர் வரை மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,34 980 போக்குவரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதே வேளை,கடந்த 13 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 9687 போக்குவரத்து வழக்குகள் பதிவாகியள்ளது.

மேலும் , கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தொடரவுள்ளது.

பண்டிகை காலங்களில் அதிகளவிலான விபத்துக்கள் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையின் காரணமாக இடம் பெற்றுள்ளமை கடந்த வருட புள்ளிவிபரங்களுக்கு அமைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு வாகனவிபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.