லிந்துலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெல் கிரேவியா தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

 பிரதேச மக்களினால் லிந்துலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு தூக்கிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.  

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, நீதவானின் மரண விசாரணைகளை அடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். 

சம்பவதினத்தன்று குறித்த நபரின் குழந்தையும் மனைவியும் வீட்டில் இருக்கவில்லை என்றும் அவர்கள் அம்பேவெலயிலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும்  ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.