பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்க அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க 5 விக்கெட்டுகளால் மும்பை அணி தனது 5 வெற்றியை பதிவுசெய்தது.

ஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த ஊரில் வைத்து பெங்களுர் ரோயல் சலன்ஞர்ஸ் அணியை எதிர்கொண்டது.

மும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்கிய அதேவேளை, பெங்களுர் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்கினார்.

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

அதில் அணித் தலைவர் விராட் கோலி 8 ஓட்டங்களுடனும் பார்திவ் படேல் 28 ஓட்டங்களுடனும் வெளியேறினர். 

அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 

மேலும் இருவரும் அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதில் மொயின் அலி 50 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ஓட்டமெதுவும்  எடுக்காமல் வெளியேறினார். 

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன்  75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்‌ஷ்தீப் நாத் 2 ஓட்டத்துடனும் பவன் நெகி ஓட்டமெதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். 

இறுதியில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ஓட்டங்களையும் மொயின் அலி 50 (32) ஓட்டங்களையும் எடுத்தனர். 

மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க மும்பை அணியில் குயின்டன் டீ கொக், அணித் தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

சிறப்பான தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் ரோகித் சர்மா 28(19) ஓட்டங்களுடனும் டீ கொக் 40(26) ஓட்டங்களுடனும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய இஷான் கிஷான் 21(9) ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியத சூர்யகுமார் யாதவ் 29(23) ஓட்டங்களுடன்  வெளியேறினார். அடுத்ததாக குர்னால் பாண்ட்யா 11(21) ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 37(16) ஓட்டங்களையும்  பொல்லார்ட் ஓட்டமெதுவும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

முடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதன்மூலம் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.