அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அடையாறில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார்.

இதேவேளை, "சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட செயல்தான் நோட்டாவுக்கு போடும் வாக்கு” என்றும் சீமான் பேசினார்.

சென்னை அடையாறில் நேற்று (14 ஆம் திகதி) மாலை, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது.

இதில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அ.ஜெ.ஷெரினை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;

“அனைவரும் வாக்கு போடணும்; கட்டாயம் போடணும், ஆனால் அதை, நோட்டாவுக்கு போடுற முயற்சியை கட்டாயம் கைவிடணும். எனென்றால், சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் தராமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட செயல்தான் நோட்டாவுக்கு போடும் ஓட்டு. எங்களுக்கு வாக்கு  போடாமல், நீங்கள் அதை நோட்டாவுக்கு போடுவதற்கு காரணம் என்ன..? அதை சொல்லுங்கள், நாங்களும் நோட்டாவுக்கே போட்டுவிடுகிறோம்.

நோட்டாவுக்கு ஓட்டு போடுவதால், அது எந்த மாற்றத்தையும் தராது. ஒரு லட்சம் வாக்கு நோட்டாவுக்கு விழுந்திருந்தால் கூட, ‘நோட்டா வென்றது’ என்று அறிவிக்க மாட்டார்கள். அதனால், நோட்டாவுக்கு போடுவது பயனில்லை. என் அன்பு மக்களே, உங்கள் வாக்கு மதிப்பு மிக்கவை. அவைகளை வீணடித்து விடாதீர்கள். மதிப்புமிக்க உங்கள் உரிமையை விட்டு விடாதீர்கள்.

நீங்கள் நோட்டை வாங்கிக்கொண்டு வாக்கை விக்கிறீர்கள்; அவர்களோ, உங்கள் வாக்கை வாங்கிக்கொண்டு நாட்டை விக்கிறார்கள் என்ற புரிதலுக்கு நீங்கள் வரவேண்டும். உயிரை இழக்கலாம்; ஆனால், உரிமையை இழக்கக்கூடாது. உயிரை இழப்பதென்பது தனிப்பட்ட இழப்பு; உரிமை இழப்பு என்பது ஒரு இனத்திற்கான இழப்பு, எதிர்கால தலைமுறைக்கான இழப்பு. அதை இழந்து விடாதீர்கள்.

பெரிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் வாரிசுகளை தேர்தலில் நிறுத்துகிறார்கள். நாங்களும் பண பலம், ஊடக வலிமை எதுவும் இல்லாத வாரிசுகள்தான்; எளிய மக்களாகிய உங்களின் வாரிசு, உழைக்கும் மக்களின் வாரிசுகள், வேளாண் பெருங்குடி மக்களின் வாரிசு. எங்களுக்கு வாக்களித்து வலிமைப் படுத்துங்கள். புத்தம் புதிய அரசியலை, ஒரு தூய அரசியலை இந்த நிலத்தில் இருந்து கட்டியெழுப்புங்கள்.

இந்த பணநாயகத்தைக் கொன்று, புதிய ஜனநாயகத்தை படைக்க எங்களுக்கு வலிமை தாருங்கள். அதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள் என் அன்பிற்கினிய சொந்தங்களே. படித்த இளைஞர்கள், அறிவார்ந்த இளைஞர்கள், அடுத்த தலைமுறைக்கு தூய அரசியலை செய்யவேண்டும் என்கிற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிற இளைய தலைமுறையினரே, புரட்சியாளர்களே... உங்களை நம்பித்தான் உங்கள் மூத்தவர்கள் இந்த களத்தில் நிற்கிறோம்.

இந்த புரிதலோடு நீங்கள் வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அவர் பேசினார்.