ஐ.பி.எல். 12 தொடரின் 30 ஆவது போட்டியில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டில்லி கெபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது .

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 30 ஆவது லீக் போட்டி நேற்று இரவு ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகியது. 

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய டில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். 

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ஓட்டங்களுடனும் பிரித்வி ஷா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து இறங்கிய அணித் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார்.  அவர் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை எடுத்து,  ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து 156 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது.  ஆரம்ப ஆட்டக்காரர்களாக டேவிட் வோர்ணர் மற்றும் ஜானி களம் இறங்கினர்.  

ஆட்டத்தின் 9 ஓவர் வரை களத்தில் நின்று இருவரும் ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.  ஆட்டத்தின் 9.5 வது ஓவரில் கீமோ போல் வீசிய பந்தில் பிடிகொடுத்து ஜானி 41 (31) ஓட்டங்களை எடுத்தபோது ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த வில்லியம்சன் 3 (8), ரிக்கி 7 (12) வந்த வேகத்தில் கீமோ போல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர்.

போட்டியின் 16.2 வது ஓவரில் டேவிட் வோர்ணர் 47 பந்துகளை சந்தித்து 51 ஓட்டங்களை எடுத்து ரபடா வீசிய பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். போட்டியின் 16.2 ஓவரில் ஐதராபாத் அணி 106 ஓட்டங்கள்  எடுத்து 4 விக்கெட்களை இழந்திருந்தது.  

அடுத்ததாக களம் இறங்கிய விஜய் சங்கர் 1 (2), ஹோடா 3 (4), ரஷித் கான் 0 (1), அபிசேக் சர்மா 2 (3)  புவனேஷ்வர் குமார் 2 (4), அஹமத் 0 (1)  என  ஓட்டங்களை எடுத்து வந்த வேகத்தில் வெளியேறினர். போட்டியின் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது ஐதராபாத் அணி.  இதன் மூலம் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டில்லி அணி  எளிதான வெற்றியை பெற்றது. 

டில்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட், கிறிஸ் மோரிஸ், கீமோ போல் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக டில்லி அணியின் கீமோ போல் தெரிவுசெய்யப்பட்டார்.