(லியோ நிரோஷ தர்ஷன்)

மே தின கூட்டத்திற்கான முதலாவது அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்க உள்ள நிலையில் அதனை பெற்றுக் கொள்வதற்கு  அவர் எமக்கு இதுவரையில் நேரம் வழங்க வில்லை. எவ்வாறாயினும்  காலி மே தின கூட்டத்திற்கு வராத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அடுத்த வெற்றிக்கான ஆரம்பமாகவே  எதிர்வரும் மே தின கூட்டம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் ஈபிடிபி மற்றும் மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தெற்கில் முஸ்லிம் கட்சிகள் என 11க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் எம்முடன் இணைந்து மே தின கூட்டத்தில் கலந்துக் கொள்ளவுள்ளனர். எனவே இனி பிரிவு மற்றும் தனித்து என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.