ஐ.பி.எல். 12 தொடரின் 30 ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திலிருக்கும் டில்லி அணி 6 ஆவது இடத்திலிருகு்கும் ஐதராபாத் அணியை எதிர்கொள்கின்றது.

இப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ரஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்ஸன் தலைமை தாங்குகின்றார். டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை தாங்குகின்றார்.

இதுவரை இரு அணிகளும் 13 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளனர் ஐதராபாத் அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 4 போட்டிகளில் டில்லி அணி வெற்றிபெற்றுள்ளது.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன்  3 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. 

தோள்பட்டை காயம் காரணமாக இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களம் இறங்கிய கேன் வில்லியம்சன் உடல் தகுதியை எட்டி இருப்பதால் இன்றைய போட்டியில் களம் காண்பார் என்று தெரிகிறது. கடந்த 2 லீக் போட்டிகளில் ஐதராபாத் அணி அடுத்தடுத்து தோல்வி கண்டது. இதனால் வெற்றிப்பாதைக்கு திரும்ப அந்த அணி ஆர்வம் காட்டும்.

டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 3 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது. 

அந்த அணி தனது கடைசி 2 லீக் போட்டிகளில் பெங்களூரு, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து சாய்த்தது. 

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 97 ஓட்டங்களை குவித்து பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். 

ஐதராபாத்துக்கு எதிரான லீக் போட்டியில் டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.