ஐ.பி.எல். 12 தொடரின் 29 ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள சமபலம் பொருந்திய சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

கொல்கொத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து 8 புள்ளிகளைப்பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்திலுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையலான இன்றைய போட்டி கொல்கத்தாவில் ஈடன்கார்டன் மைதானத்தில் பிற்பகல் 4 மணிக்கு பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைமை தாங்குகின்ற நிலையில் கொல்கொத்த அணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமை தாங்குகின்றார்.

இரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில் 12 போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. மிகுதி 7 போட்டிகளில் கொல்கொத்தா அணி வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அந்தப் போட்டியில் கொல்கத்தாவை 108 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி சென்னை அணி கடிவாளம் போட்டது. 

மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் தோல்வி கண்ட சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றியை தனதாக்கியது. 

அந்த வெற்றி பயணத்தை தொடர சென்னை அணி முழு வேகத்துடன் செயல்படும். சென்னை அணி தனது முந்தைய லீக் போட்டியில் கடைசி பந்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் நோ–பால் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை அணித் தலைவர் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், விமர்சனத்துக்கும் ஆளானார். அந்த சர்ச்சையை புறம் தள்ளி தோனி தனது கேப்டன்ஷிப் வெற்றியை அதிகரிக்க முனைப்பு காட்டுவார்.

இதேவேளை, இரு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி நெருக்கடியில் உள்ளது. அந்த அணி அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸசெல்லையே அதிகம் நம்பி இருக்கிறது. 

தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 40 ஓட்டங்களுக்கு மேல் குவித்து இருக்கும் ரசெல் இதுவரை 29 சிக்சர்கள் அடித்து பிரமிக்க வைத்துள்ளார். மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி வரும் ரசெல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ஆடாமல் போனால் அது கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவாகும். போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமானதாகும். எனவே இந்த ஆட்டத்தில் ஓட்ட மழையை எதிர்பார்க்கலாம்.