"தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமானால், திமுக - காங்கிரசுக்கு முடிவுகட்ட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக - காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது” என்று, தேனியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்வரும் 18 ஆம் திகதி லோக்சபா மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரிசல்பட்டி விலக்கில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  13 ஆம் திகதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது; 

“நாடும் நமதே, நாற்பதும் நமதே. ஜாலியன் வாலாபாக் 100 ஆவது ஆண்டு நினைவு தினமான இன்று, உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். நாளை (இன்று) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும், வளத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே புதிய இந்தியா. காங்கிரசும் தி.மு.க.வும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,  ராகுலை பிரதமர் என கூறுகிறார். மக்கள் யாரும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்பது, சிறுபிள்ளைத் தனமாக செயல்பாடு.

ஆனால், உங்கள் காவலாளியான நான் உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன். நான் எந்த தீமைக்கும் வழி விடமாட்டேன். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமானால், தி.மு.க. - காங்கிரசுக்கு முடிவுகட்ட வேண்டும். வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. - காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது. 

வீரமான தேனி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். காங்கிரஸ், நாட்டை கொள்ளையடிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு  எதிராக நடத்தப்பட்ட இராணுவத்தினரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். தேசத்தின் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்.

கடந்த 60 ஆண்டு காலமாக நம் தேசத்திற்கு அநியாயம் செய்ததுதான் காங்கிரஸ் ஆட்சி. தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் நீதி தருமா..? காங்கிரஸ் ஆட்சியில் போபால் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு நியாயம் தருமா..?” என, மோடி பேசினார்.

கூட்டத்தில், தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து, கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மயில்வேல்.

ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன், சாத்தூர் அதிமுக வேட்பாளர் ராஜுவர்மன், நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் பிரேமலதா விஜயகாந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.