வீதியில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை, உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்களான அக்காவையும்,  தம்பியையும், இந்தியாவின், விழுப்புரம் மாவட்ட பொலிஸ் அதிகாரி, ஜெயகுமார் பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.
இந்தியா, விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டையை அடுத்துள்ள, நத்தகாளியைச் சேர்ந்த தம்பதி சரவணன் - சரோஜா. இவர்களது மகள் ஜோதிகா (13), மகன் சதீஷ் (10). இருவரும், அருகில் உள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 8 மற்றும் 5ம் வகுப்பு படிக்கின்றனர். 

நேற்று முன்தினம் காலை, இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, வீதியில் ஒரு தங்கச் சங்கிலி கிடந்துள்ளது. அதனை எடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுமார் ஒரு பவுன் எடைகொண்ட அந்த தங்கச் சங்கிலி குறித்து, தலைமை ஆசிரியர் செல்வகுமார் தனது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த, ஏமம் அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அது தனக்கு சொந்தமானது என தெரிவித்தார். உரிய விசாரணைக்குப் பின், அவரிடம் அந்தச் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும், நேர்மையாக செயல்பட்ட ஜோதிகா - சதீஷ் இருவரையும் தலைமை ஆசிரியர் செல்வகுமார் உட்பட மற்ற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமார், ஜோதிகா மற்றும் சதீஷை கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து அங்கு, இருவருக்கும் சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.