ஐ.பி.எல். 12 தொடரின் 28 ஆவது போட்டியில் கோலி தலைமையிலான பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, மொகாலியில் வைத்து அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கின்றது.

இன்றைய போட்டி மொகாலியிலுள்ள பிந்ரா மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை 22 போட்டிகளில் நேருக்குநேர்  மோதிய நிலையில், 12 போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுளது பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், 7 போட்டிகளில்  விளையாடி 4 இல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் வலுவாக காணப்படுகிறது. 

இந்த சீசனில் மொகாலியில் ஆடியுள்ள 3 போட்டிகளிலும் அந்த அணிக்கு சுபமான முடிவு கிடைத்துள்ளது. 

அந்த ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பஞ்சாப் அணியினர் தீவிர முனைப்பு காட்டுவார்கள். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் கடந்த ஆட்டத்தின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது. 

இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி பெங்களூரு தான். ஒரு ஆட்டத்தில் 205 ஓட்டங்கள் குவித்த போதிலும் சறுக்கலே மிஞ்சியது. திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை எப்படி பயன்படுத்தி, வெற்றியை வசப்படுத்துவது என்பது தான் கோலிக்கு இப்போது உள்ள ஒரே சவால் ஆகும். 

அது மட்டுமின்றி எஞ்சிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் பெங்களூரு அணிக்கு இது கிட்டதட்ட வாழ்வா? சாவா? மோதல் ஆகும். 5 நாள் ஓய்வுக்கு பிறகு கோலி படையினர் இறங்குவதால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.