ஏ. ஆர்.ரஹ்மான் முதன் முதலாக கதை எழுதி, தயாரித்திருக்கும் ‘99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் ஜூன் மாதம் 21ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருது வாங்கிய இசை அமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான், தன்னுடைய திரை இசை பயணத்தில் இருபத்தியெட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தற்பொழுது தான் முதன்முதலாக ‘99 சாங்ஸ்’ என்ற காதல் ததும்பும் படத்திற்கு கதை எழுதி, தயாரித்திருக்கிறார்.

குறித்த படத்தில் பொலிவூட் நடிகர் ஈஹான் பட் நாயகனாகவும், ஹொலிவூட் நடிகை எடில்ஸே வர்காஸ் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார்.

இது குறித்து ஆர்.ரஹ்மான் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பவதாவது,

“ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுகிறேன். எம்முடைய தயாரிப்பில் முதன்முதலாக உருவான ‘99 சாங்ஸ்’ என்ற இசையுடன் இரண்டற கலந்த இளம் காதல் கதையுடன் கூடிய திரைப்படம்  ஜூன் மாதம் 21ஆம் திகதி அன்று வெளியாகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏ .ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், அவர் முதன்முதலாக தயாரிப்பாளராகவும், கதாசிரியராகவும் உயர்ந்திருக்கும்‘ 99 சாங்ஸ்’ என்ற படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் தற்போது ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.