(நா.தினுஷா)

ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கம் கோருவது அவசியமற்றதாகும்.அதற்கான நேரமும் இதுவல்ல. மாறாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிரணிதரப்பில் எழுந்துள்ள பிளவுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே குறுகிய காலத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்.

 பொது இணக்கப்பாட்டினூடாகவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வெற்றியை தீர்மானிக்க முடியும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா வீரக்கொடி தெரிவித்தார்.

மேலும் பிளவுப்பட்டுள்ள அணியினருக்கு இடையில் ஒரு பொது இணக்கப்பாடு ஏற்படுமாக இருந்தால் மாத்திரமே பொதுக்கொள்கையொன்றுக்கு வர முடியும். 

அவ்வாறான பொது கொள்கை தயாரிக்கப்படும் போது எதிர்வரும் தேர்தலின் போது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் .

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எதிர்வரும் ஆறு மாதக்காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை எதுவும் தற்போது இல்லை. பதவிகாலம் குறித்து நீதிமன்றத்தின் விளக்கத்தினை பெற்றுக்கொள்வதற்கான நேரமும் இதுவல்ல.

எதிர்கால வெற்றிகள் அனைத்தையும் கட்சியின் ஒற்றுமையே தீர்மானிக்கும் என அவர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.