( செ.தேன்மொழி )

மஹியங்கனை , பண்டாரகம மற்றும் யக்கல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் காயமடைந்துள்ளனர்.

 மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 12. 30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த கெப் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  உயிரிழந்துள்ளார்.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய விபுல தனஞ்சய புஷ்ப குமார எனப்படுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 அதேவேளை பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். இதன்போது சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இதேவேளை யக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று தனியார் பேரூந்துடன் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நபரொருவரும் 11 வயதுடைய சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாரவூர்தியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , சாரதியும் சிறுவனும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.