(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டை காட்டிக்கொடுத்து ஐக்கிய நாடுகளில் உயர் பதவியொன்றை பெற்றுக்கொள்ள மங்கள சமரவீர முயற்சித்து வருகின்றார்.அதற்காகவே மனித உரிமை பேரவையில் எமக்கெதிரான பிரேரணையில் இருந்து வெளியேற சந்தர்ப்பம் கிடைத்தும் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புஞ்சி பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பரிமாற்ற கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக  அமெரிக்கா 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தது. குறித்த பிரேரணைக்கு இலங்கையும் அனுசரணை வழங்குவதாக கைச்சாத்திட்டிருந்தது. என்றாலும் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை விமர்சித்துக்கொண்டு  அமெரிக்கா கடந்த வருடம் அதிலிருந்து வெளியேறியது.

இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்த நாடு மனித உரிமை பேரவையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், குறித்த பிரேரணையை செல்லுபடியற்றதாக்கி எமக்கு அந்த பிரேரணையில் இருந்து வெளியேற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. என்றாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாமல் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகளுக்கு சென்று பிரித்தானியா உட்பட சிறிய நாடுகளுடன் கலந்துரையாடி எமக்கெதிரான பிரேரணையை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.

மேலும் வடக்கில் ஆரம்பத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் அதற்கு எமது அண்மை நாட்டு நண்பர் ஆயுதம் மற்றும் பணத்தால் உதவியளித்ததுடன் ஆயுத பயிற்சிளையும் வழங்கினார் என அவர் இதன் போது தெரிவித்தார்.