முப்பது வருடகால ஆட்சிக்கு பின்னர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீரை அந்த நாட்டின் இராணுவம் பதவியிலிருந்து அகற்றியுள்ளது.

சூடானின் அரசவட்டாரங்களும் அமைச்சர்களும் இதனை தெரிவித்துள்ளனர்

அல்பசீர் பதவியிலிருந்து விலகியுள்ளார் சூடானை ஆள்வதற்காக  இராணுவநிர்வாகமொன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன  என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்

75 வயது ஜனாதிபதி இராணுவத்தினரால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்,தற்போது ஜனாதிபதி மாளிகையில் கடும் இராணுவ பாதுகாப்பின் கீழ் அவர் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இது குறித்த அறிவிப்பை இராணுவம் விரைவில் வெளியிடவுள்ளதாக அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சூடானின் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையலுவலகத்தை படையினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன

சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீரின் ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுவந்த நிலையிலேயே இராணுவத்தினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

சூடான் ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அவரிற்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.