எந்தத் தேர்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் வரலாம் என்கின்ற தளம்பல் நிலையில்தான் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தடுமாறிக் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் புதன்கிழமை மாலை (10) இடம்பெற்ற நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட்,

வரவு - செலவுத் திட்ட விடயங்கள் முடிந்தவுடன் அடுத்து வருகின்ற ஓரிரு மாதங்களுக்குள் நாட்டின் எந்தவொரு அரசியல் தலைமைகளும் தேர்தலை நோக்கி நகர்வார்களே தவிர வேறு வேலை அவர்களுக்கு இருக்காது. அது மாகாண சபைத் தேர்தலாகவோ, பாராளுமன்றத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம்.

இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக சந்தி கிழிக்கப்படப் போகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. எத்தனை காலம்தான் இவர்களால் இந்த ஏமாற்று அரசியலை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல முடியும்?

அரசியலில் 25, 30 வருடங்களாக இருந்து வருகின்றோம் என்று பிதற்றித் திரிகின்ற அரசியல்வாதிகள் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை எதிர்வருகின்ற அரசியல் களம் நன்கு உணர்த்தும். இவர்கள் சமூகத்திற்குத் தொடர்ந்தும் துரோகத்தையே செய்து வந்திருக்கின்றார்கள்.

பாராளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பாதிக்கப்பட்டுப்போயுள்ள சிறுபான்மை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த இந்த பழுத்த அரசியல் தலைமைத்துவங்கள் தவறி விட்டன. வரவு செலவுத் திட்ட விவாத சந்தர்ப்பத்திலே சிறுபான்மை சமூகத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய கலப்பு முறையிலமைந்த மாகாண சபைத் தேர்தலை  விகிதாசார முறையிலே நடத்துங்கள் என்று பேரம் பேச எந்த சிறுபான்மைச் சமூக அரசியல்வாதிக்கும் வக்கில்லாமல் போய்விட்டது. இது வருந்தத் தக்கது.

இந்த இலட்சணத்தில் இவர்கள் கால்நூற்றாண்டு அல்லது அதற்கும் கூடுதலாக அரசியல் அனுபவம் பெற்றிருக்கின்றோம் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. குரல் கூடககொடுக்க முடியாத அரசியல் வங்குரோதத்தில்தான் முஸ்லிம் சமூக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே, பாதிக்கப்படும் சமூகத்துக்காக உரிய இடங்களில் குரல் கூடக் கொடுக்க முடியாத அரசியல் தலைமைகளால்  எப்படி வீதியில் இறங்கி உரிமைக்காகப் போராட முடியும்? மாகாண சபைத் தேர்தல் இல்லாமல், அங்கு மக்களாட்சி இல்லாமல் இருக்கின்ற விடயம் இப்பொழுது சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பாரிய பாதிப்பாக இருந்தும் அதுபற்றி வாயே திறக்காத அரசியல் தலைமைகளை சமூகக் காவலர்கள் என்று எப்படி நம்பிக் கொண்டிருக்க முடியும்?

மாகாண சபைகள் இயங்காததைத் தொடர்ந்து அபிவிருத்திகளோ முன்னேற்றங்களோ இல்லாது ஸ்தம்பித்து போன மாகாணங்களாவே அவை நகர்ந்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் சமூக அரசியல் ஒரு சிறு விடயத்தைக் கூட பாராளுமன்றத்திலே சாதிக்க முடியாத நிலைமையை எண்ணி வருத்தப்பட வேண்டியுள்ளதோடு இதனை மாற்றியமைக்க வேண்டியது பற்றி சமூகம் விரைவாகச் சிந்திக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உத்தரவாதம், உரிமைகள், பாதுகாப்பு, இருப்பு என்பன கேள்விக் குறியாகிவிடும்” என்றார்.