தாம் வீட்டில் இல்லாத போது தமது கணவரோ அன்றி மனைவியோ முறையற்ற காதல் தொடர்பைப் பேணி தமக்கு துரோகம் செய்கிறார்களா என்பதை கண்டறிய அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கு உதவும் உயர் தொழில்நுட்ப கட்டில் மெத்தையொன்றை ஸ்பெயினைச் சேர்ந்த படுக்கை தயாரிப்பு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.

டர்மெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'ஸ்மார்ட்' மெத்தையில் கணவன் அல்லது மனைவி துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் போது, அந்த மெத்தை தொலைபேசி மென்பொருளை பயன்படுத்தி வாழ்க்கைத் துணைகளுக்கு எச்சரிக்கை செய்கிறது.

மேற்படி மெத்தையின் மீது இடம்பெறும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளை இனங்கண்டறியும் வகையில் அதில் 14 அல்ட்ராசோனிக் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த உணர்கருவிகள் மெத்தை மேல் இடம்பெறும் செயற்பாடுகளை முப்பரிமாணக் காட்சியாக வாழ்க்கைத் துணையின் கையடக்கத்தொலைபேசியில் காட்சிப்படுத்தி அவரை எச்சரிக்கை செய்கிறது.

வழமையான கட்டில் மெத்தை போன்று காணப்படும் இந்த மெத்தையின் விலை 1,200 ஸ்ரேலிங் பவுணாகும்.

ஐரோப்பாவிலேயே தமது வாழ்க்கைத் துணைகளுக்கு துரோகம் செய்பவர்களை அதிகளவில் கொண்ட நாடாக ஸ்பெயின் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.