இலங்கை அணியின் முக்கியமான வீரர்கள் தற்போது நடைபெறும் உலக கிண்ணத்திற்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான முன்னோடிப்போட்டியில் சிறப்பாக விளையாடததன் காரணமாக உலக கிண்ணத்திற்கான அணியை தெரிவு செய்வது குழப்பமானதாக மாறியுள்ளது என  தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

அனைத்து வீரர்கள் விளையாடும் விதத்தினையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் முக்கிய வீரர்கள் விளையாடும் விதம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய முடியாது என தெரிவித்துள்ள அசந்த டி மெல் ஆரம்ப  துடுப்பாட்ட வீரர்கள் விளையாடும் விதம் குறித்தும் ஏமாற்றம் வெளியி;ட்டுள்ளார்

இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இவர்கள் விளையாடும் விதத்தினை அடிப்படையாக வைத்து 15 வீரர்கள் குறித்து  ஓரளவு தீர்மானித்துள்ளோம், எனவும் தெரிவித்துள்ள அசந்த டி மெல் எனினும் உலக கிண்ணப்போட்டிகளிற்கு இளம் வீரர்களை  தெரிவுசெய்ய முடியாது இதுவே பிரச்சினையாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்

எங்களால் ஐம்பது ஓவர்கள் விளையாட முடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அசந்த டிமெல் தற்போதைய தொடரில் ஒரு சதம் மாத்திரமே பெறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண உலக கிண்ணத்திற்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான முன்னோடிப்போட்டியில் சிறப்பாக விளையாடிவருகின்றமை குறித்தும் அசந்த டிமெல் மகிழ்ச்சி  வெளியிட்டுள்ளார்.

நாங்கள் அவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்க விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள அசந்த டி மெல் ஐம்பது ஓவர்கள் வரை விளையாடக்கூடிய வீரர் ஒருவர் இலங்கை அணிக்கு அவசியமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்