(நெவில் அன்தனி)

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான 27ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நெற்று நடைபெறவுள்ளது.

2014இல் நடைபெற்ற இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 26ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இடம்பெற்ற துயர் சம்பவத்தை அடுத்து கடந்த நான்கு வருடங்களாக பொன் அணிகளின் மாபெரும் கிரிக்கெட் சமரும் ஒருநாள் கிரிக்கெட் சமரும் விளையாடப்படவில்லை.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் 2014வரை நடந்து முடிந்த 26 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 19 வெற்றிகளையும் யாழ்ப்பாண கல்லூரி 6 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. 2014 போட்டி மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற துயர் சம்பவத்தால் இடையில் கைவிடப்பட்டது.

புனித பத்திரிசியார் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஏ. பி. திருமகன் அடிகளார், யாழ்ப்பாண கல்லூரி அதிபர் வண. கலாநிதி டி. எஸ். சொலமன், இரண்டு பாடசாலைகளினது ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரிடையே நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்து இவ் வருடம் ஒருநாள் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடம் புனித பத்திரிசியார் அணிக்கு டி. ஆர். பியெட்ரிக்கும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு ஏ. கஜீபனும் தலைவர்களாக விளையாடுகின்றனர்.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1985 இல் ஆரம்பிக்கப்பட்டது. யாழ். குடாநாட்டில் இரண்டு பாடசாலைகள் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியமை அதுவே முதல் தடவையாகும்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் அப்போதைய முதல்வர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரால் அப்போதைய யாழ்ப்பாண கல்லூரி அதிபர் ராஜன் கதிர்காமர் கிண்ணத்துக்காக இப் போட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான பொன் அணிகளின் மாபெரும் கிரிக்கெட் சமரை மீண்டும் தொடர இரண்டு கல்லூரிகளும் இணங்கியுள்ளன. இதற்கு அமைய அடுத்த வருடம் 103ஆவது பொன் அணிகளின் சமர் நடைபெறும் எனவும் இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் முதல் தடவையாக இருபது 20 கிரிக்கெட் போட்டி  நடத்தப்படவுள்ளது.

அணிகள் விபரம்

புனித பத்திரிசியார்: டி. ஆர். பியெட்ரிக் (தலைவர்), என். மோனிக் நிதுஷன் (உதவி தலைவர்), ஏ. ஐவன் ரொஷாந்தன், ஏ. பெனாட்ஷன், எம். எடிசன் புகழேந்தி, கே. ரெமிங்டன், டி. டெனிஷியஸ், ஏ. அமலதாஸ், ஜே. ஆகாஸ், ஏ. எவ். டெஸ்வின், என். டிலக்ஷன், எஸ். பி. கெஸ்டோ, ஜீ. அபிஷேக், ரி. சிவசங்கரராஜா, ஜே. திவாகரன். 

யாழ்ப்பாண கல்லூரி: ஏ. கஜீபன் (தலைவர்), எஸ். நவரங்கன் (உதவித் தலைவர்), எஸ். பிரியங்கன், எம். பிரேந்த்ரா, எஸ். மதூஷன், பி. சஞ்சயன், ஜே. கீதவர்சன், ஏ. கௌஷிகன், ஏ. நிகாரிலன், ஏ. லவகீசன், ரி. நிசாந்த், கே. பிரகாஷ், எஸ். தனுராஜ், ஆர். வித்தகன், எம். சிந்துஜன், எஸ். கேசவன். பயிற்றுநர்: ஆர். குகன்,