குடும்ப தகராறை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அது தொடர்பில் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்கு சென்ற போது குறித்த பெண்ணின் கணவன் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டார். 

இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்ததுடன், அவரது சீருடையும் கிழிந்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டனர். 

அங்கு வந்த பொலிசார் தாக்குதல் நடத்தியவரை கைது செய்ததுடன் , தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.