(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இவ்வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து 2077 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இத்தொகையானது கடந்த 2014 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட வரி வருமானத்தை போல் இரண்டு மடங்காகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு அமைய  அனைத்து அரச ஊழியர்களுக்கும்  விசேட மாதாந்த கொடுப்பனவு  2500 ரூபா வழங்கல், சமுர்த்தி பயணானிகளாக புதிதாக 6 இலட்சம் குடும்பங்களை இணைத்துக் கொள்ளல், தற்போதைய சமூர்த்தி பயணாளிகளுக்கு அவர்களது கட்டாய சேமிப்பில் இருந்து  சித்திரை புதுவருடம், நத்தார் பண்டிகை ஆகியவற்றிற்கான செலவுகளுக்கென  இரு பிரிவாக 30 இஆயிரம் ரூபாவை பெற்றுக்  கொடுத்தல், காணாமல் போனோரின்  குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ஆம் ரூபாவை வழங்கல், அக்கொடுப்பனவை  இழப்பீட்டு அலுவலகத்தின் முலம்  இழப்பீட்டு தொகை  வழங்கப்படும் வரை  தொடர்வதற்கு  தீர்மானித்தல்   ஆகிய திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதனால் இவ்வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தலை இலக்காக கொண்டவை  என்பதே பலரின் சந்தேகமாக உள்ளது.

அரசாங்கம்   சமூர்தி பயணாளிகளாக உள்ளீர்க்கப்படுவதற்கென   தகுதிகள்  இருந்தும் பல்வேறு அரசியல் காரணிகளினால்  அந்த வாய்ப்பு  மறுக்கப்பட்ட பெருமளவான குடும்பங்கள் நாட்டில் இருப்பதாக குறிப்பிட்டு , புதிதாக 6 இலட்சம் சமுர்தி பயணாளிகளை புதிதாக இணைத்துக் கொள்கின்ற திட்டத்தை அரசாங்கம் நியாயப்படுத்துகின்றது. இவ்வாறு  பல குடும்பங்கள்  அரசியல் காரணிகளினால்  பாதிப்படைந்துள்ளன என்பதே  இந்த அரசாங்கத்திற்கு  நான்கு   வருடங்கள் கடந்துள்ள நிலையில்   தான் தெரிந்துள்ளது. 

அரசாங்கம் மக்களின் துன்பத்தையும், வருமையினையும், கருத்திற் கொள்ளாமல் தேர்தலை மாத்திரம் இலக்காக கொண்டு  இவ்வணைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளன.  நாட்டின்  வறுமையை  குறைத்துள்ளதாக குறிப்பிடுகின்ற  அரசாங்கம்  அதே  சமகாலத்தில்  சமுர்த்தி பயணாளிகளின் எண்ணிக்கையை 42 வீதமாக அதிகரித்துள்ளது. இது அரசாங்கத்தின்  கூற்றுக்கும் நடைமுறைக்கும் இடையிலான வேறுப்பாடடை காட்டுகின்றது.  அதே போன்று  சமுர்த்தி பயணாளிகளின் சேமிப்பில்  இருந்தில்  புதுவருடம், நத்தார் பண்டிகைக்கு   கடந்தாண்டுகளில் கொடுப்பனவு  எவற்றையும் வழங்கியிருக்கவில்லை. இவ்வருடம்  30 ஆயிரம் ரூபாவை வழங்கியதும் எதிர்வரும் வருடங்களில் அதனை தொடர்வதற்கு  சேமிப்பு இருக்காது  என்பது தெளிவாகுகின்றது.

சமுர்த்தி பயணாளிகளிடத்தில் சேமிப்பு  பழக்கத்தை ஏற்படுத்துதல் , சுயதொழில் மற்றும் ஜீவனோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல்  ஆகிய நோக்கங்களுக்காகவே  சமுர்த்தி கொடுப்பனவில்  சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை பண்டிகைகளுக்கு செலவழிப்பதற்கு  வழங்குவதென்பது நாம் இதுரை கேள்விப்பட்டிராத விடயமாகும்.   

கடந்த 2015ம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு 10ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு , எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு , என்பன  உள்ளடக்கப்பட்டிருந்தன.   அவை   2015 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை இலக்காக கொண்டே  உள்வாங்கப்பட்டிருந்தன. அதன் பின்னர்  நல்லாட்சி அரசாங்கம் 2014ம் ஆண்டு  1050 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட அரச வரி வருமானத்தை  2015ம் ஆண்டில் 1355பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. ஒருவருட காலப்பகுதிக்குள் வரி வருமானத்தில்  305 பில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.   இத்தொகையானது  எமது அரசாங்கத்தில்  குறைந்த பட்சம்  3 வருட  காலப்பகுதிக்கு  மேற்கொள்ளப்பட்ட வரி அதிகரிப்பினால் பெறத்தக்க வருமானத்திற்கு  சமனாகும்.

எமது ஆட்சிகாலத்தில் 2006தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில்   நாட்டில்  யுத்த நிலை காணப்பட்ட  போதிலும்  வரடாந்த பொருளாதார வளர்ச்சி வேகம்  6 சதவீதமாக காணப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர்  2010-2014 வரையிலான காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி வேகம்  7.4 வீதம் வரை அதிகரித்திருந்தது.  நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து  எந்த ஒரு அரசாங்கமும்   நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 6 சதவீதத்தை அண்மிப்பதற்கான முயற்சிகளையேனும் மேற்கொண்டிருக்கவில்லை.

அரசாங்கம்  இவ்வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து  2077 பில்லியன் ரூபா வரி வருமானத்தை  திரட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இத்தொகையானது   கடந்த 2014ம் ஆண்டு திரட்டப்பட்ட   வரி வருமானத்தை போல் இரண்டு மடங்காகும்.   2015ம் ஆண்டு  5சதவீதமாக காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகம் 2016ல் 4. 5சதவீதமாகவும்,  2017ல் 3. 1 சதவீதமாகவும் வீழ்ச்சிக கண்டுள்ள ஒரு நிலையிலே  இத்தகைய  பெருமளவு  வரி வருமானத்தை  திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறான மந்தமான  பொருளாதார  வளர்ச்சி வேகத்தின்  காரணமாக அரசாங்கம் விதிக்கும் வரிச்சுமையை  எதிர்கொள்ளும் ஆற்றலை பொதுமக்கள் இழந்துள்ளனர்.

 2014ம்  ஆண்டீன் இறுதியில் 7391 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட  நாட்டின் மொத்த கடன் சுமை 2018 ம் ஆண்டின் இறுதியில் 11859 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இது  ஒரு வருட காலத்திற்குள்  62 வீதத்தினால் கடன் சுமையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும். நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்களின் வாக்குகளை திரட்டிக் கொள்வதற்காக ஏற்பட்ட செலவுகளுக்கு பெறப்பட்ட  கடன்களாலேயே  இத்தகைய  கடன்சுமை ஏற்பட்டுள்ளன. பெருமளவு கடன்  பெறப்பட்டுள்ள போதிலும் அதற்கேற்றவாறு  கடந்த   காலங்களில் எவ்வித அபிவிருத்தி  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கத்தினால் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது மக்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள் ஆனால்  இந்த அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்ளும் செயல்களையே   செய்கின்றது.

 2014ம் ஆண்டு அமெரிக்க  டொலருக்கு எதிரான  ரூபாவின் பெறுமதி  131 ரூபாவாக காணப்பட்டது. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக சகல இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஆனால் எமது ஆட்சி காலத்தில்   நாம் மேற்கொண்ட அரச சம்பள அதிகரிப்பு  மக்களின் கைகளிலேயே  முழுமையாக கிடைக்கப் பெற்றன . ஆனால்  இந்த அரசாங்கம்  தேர்தலை இலக்காக கொண்டு செலவுகளை அதிகரித்தல்,  அதனை ஈடு செய்வதற்கு பெறுமளவில் கடன் பெறல் , கடனை மீள் செலுத்த மக்களிடம் பெருந்தொகையாக  வரி அறவிடல்  என்ற  முறையற்ற செயற்பாட்டிலே ஈடுப்படுகின்றது .