மக்களுக்கு பணியாற்றுவதாகக் கூறி எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, அரசியல் பதவிகளில் அமர்ந்து அதற்கான சலுகைகளை அனுபவித்துவரும் அரசியவல்வாதிகள், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை தடுத்து வருவதால் எமது மக்களின் துரதிஷ்ட நிலை தொடர்வதையே எடுத்துக் காட்டுகின்றதென  ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி. ) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெறவுள்ள நிலையில் அதனை சிலர் தடுத்து வருவதாக அப் பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஏற்கனவே, எமது மக்கள் நலன்சார்ந்த பல திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்திருந்த நிலையில் இவ்வாறான சுயநல அரசியல் குழப்பவாதிகள் பல்வேறு நடைமுறைச் சாத்தியமற்ற பிரச்சினைகளைக் கிளப்பி அத் திட்டங்களைத் தடுத்துவிட்டனர். 

மக்களுக்கு பணியாற்றுவதாகக் கூறி எமது மக்களின் வாக்குகளை அபகரித்து, அரசியல் பதவிகளில் அமர்ந்து அதற்கான சலுகைகளை அனுபவித்துவரும் இவர்கள், எமது மக்களுக்கென இதுவரையில் ஒரு திட்டத்தையேனும் கொண்டு வந்ததாக இல்லை. இவ்வாறான நிலையில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களையும் தடுத்து வருவதானது எமது மக்களின் துரதிஷ்ட நிலை தொடர்வதையே எடுத்துக் காட்டுகின்றது.

தமது சுயநல அரசிலுக்காக அபிவிருத்தித் திட்டங்கள் எமது மக்களுக்குத் தேவையில்லை எனக் கூறிவந்த இந்தத் தமிழ் அரசியல்வாதிகள், எமது மக்கள் அபிவிருத்தியையும் ஏற்கின்ற நிலையில் அதை புறந்தள்ளினால் தாம் எமது மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு விடுவோமென அஞ்சி தற்போது அபிவிருத்தி பற்றி வாயளவில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் எமது மக்கள் அபிவிருத்திகளின் பயன்களை அனுபவிப்பதில் இந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் விருப்பமில்லை என்பதையே இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கனவே 1974ல் யாழ். பல்கலைக்கழக வளாகம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்தார்கள்.  இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை எதிர்த்து அதனை நிராகரித்ததன் மூலம் எமது மக்களுக்கான நீர்இ மற்றும் குடி நீர்ப் பிரச்சினையை நிரந்தரப் பிரச்சினையாக்கியுள்ள இவர்கள்இ இப்போது 65000 வீட்டுத் திட்டத்தையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன்மூலம் தற்போது மிகுந்த பாதிப்புகளுக்கு மத்தியில் தற்காலிக நிலைகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு அதன் பயனை கிட்டாது செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.

இந்திய அரசின் உதவியுடன் வடக்கிற்கான இரயில் பாதை மீள அமைக்கப்பட்டபோது இப்பாதை எமது மக்களுக்குத் தேவையில்லை எனக் கூறி அதற்கும் இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

பிரதான தரைப்பாதைகள் முதற்கொண்டு பல பாதைகள் நவீன முறையில் மீளமைக்கப்படபோது அதனை எதிர்த்தனர். இப்படியே எமது மக்கள் நலன்சார்ந்து கொண்டுவரப்பட்ட பல நல்ல விடயங்களை எதிர்த்த வரலாறே இவர்களது வரலாறாகும்.

கழிவு எண்ணெய்ப் படிமங்கள் கலந்துள்ள சுன்னாகம் பகுதி நிலத்தடி நீர் தொடர்பில் முறையானதொரு ஆய்வினை மேற்கொள்ள அப்போதைய மத்திய அரசுடன் இணைந்து எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  முயற்சிகளை எடுத்தபோது, அதனைக் குழப்பும் வகையில் நிபுணர்கள் அல்லாத சிலரைக் கொண்டு ஆய்வு செய்ததாகக் கூறி, அந்த நீரில் அப்படியான கழிவுகள் இல்லை என பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டனர். இன்று வரை ஒரு முடிவின்றி இப் பிரச்சினையும் தொடர்கின்றது.

இப்படியே எமது மக்களின் நலன்கள் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி, தங்களது பதவி, சலுகைகளை மாத்திரமே கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்ற இவர்களால் எமது மக்கள் மேலும், மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைமைகளே தொடர்கின்றன. 

அந்த வகையில், இப்போது வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெறுவதையும் எதிர்த்து அதற்கும் இவர்கள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, இப்படியான எமது மக்களின் நலன்களை விரும்பாதவர்களை எமது மக்கள் இனங்கண்டு கொள்வதே எதிர்கால எமது மக்களின் தெரிவுகளுக்கு வசதியாக அமையுமென அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.