கோடை காலம் தொடங்கிவிட்டால். எம்மில் பலரும் வீடு. அலுவலகம். பயணம் செய்யும் வாகனம் என அனைத்திலும் குளிர்சாதன வசதியைப் பொருத்திக் கொண்டு கோடையை சமாளிப்பார்கள். 

ஆனால் இதன் காரணத்தால் தான் வறண்ட கண் பாதிப்பு அதாவது dry eyes என்ற பாதிப்பு ஏற்படுகிறது என்றும்,  இதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பார்வைத் திறன் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இன்று உலகம் முழுவதும் எட்டு சதவீதம் பேர் வறண்ட கண் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும், தெற்காசியாவைப் பொறுத்தவரை 35 சதவீதத்தினருக்கு இத்தகைய பிரச்சினைகள் இருப்பதாகவும் அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 

கண்களில் உள்ள சுரப்பிகளிலிருந்து தேவையான அளவு நீர் சுரக்கவில்லை என்றால் வறண்ட கண் பாதிப்பு ஏற்படும். புறச் சூழலில் நிலவும் மாசு, அதிக வெப்பம், ரசாயன பொருட்கள் கலந்த காற்று ஆகியவற்றிலிருந்து விழிகளை காப்பதும் கண்ணீர்தான். இந்நிலையில் வறண்ட கண் பிரச்சனை உள்ளவர்களுக்கு போதிய அளவிற்கு கண்ணீர் சுரப்பதில்லை. இதனால் கண் எரிச்சல் ,கண் அரிப்பு, கண் கூச்சம் தன்மை போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. இவற்றை தொடக்க நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

தற்போதைய சூழலில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் இருப்பவர்களுக்கு வறண்ட கண் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 

இதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்களுடைய குளிர் சாதனத்தில் 23 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் அந்த சாதனத்தை இயக்க வேண்டாம் என்றும், குறைந்தது ஏழு அல்லது எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என்றும், அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம் என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.

டொக்டர் பிரசாந்த்.

தொகுப்பு அனுஷா.