உலகில் அதிகம் பேர் தொலைக்காட்சி வாயிலாக ரசிக்கும் விளையாட்டாக கால்பந்து, டென்னிஸ் போட்டிகளுக்கு அடுத்ததாக கிரிக்கெட் தான் உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் இன்னும் கிரிக்கெட்டில் பெரிய அளவில் கால்பதிக்கவில்லை. ஆனால் உலகில் அதிக மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள். ஏனெனில் கிரிக்கெட் உடல் மற்றும் மனஉறுதி ஆகிய இரண்டையும் சோதிக்கும் அற்புத விளையாட்டு. எதிர்பார்க்கவே முடியாத பல ஆச்சரியங்கள் கிரிக்கெட்டில் நிகழும்.
பிராட்மன், சச்சின், முரளிதரன், ஷேன் வோர்ன், லாரா, கலிஸ், சங்கக்கார, சேவாக், டி வில்லியர்ஸ் என பல ஜாம்பவான்கள் கோலோச்சிய விளையாட்டு இது. தனது நாட்டை தாண்டி மற்ற நாட்டு வீரர்களையும் ரசிக்கும், ஆராதிக்கும், கொண்டாடும் மனநிலை கொண்டவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஆஸி.வீரர் பிலிப் ஹியூக்ஸ் மறைந்தபோது ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் கண்ணீர் வடித்தது. இதேவேளை பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்து இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்றது. இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் பகலிரவு போட்டி இன்று நடத்தப்படுகின்றது.
தனது 25 வயதில் உயிரிழந்த பிலிப் ஹியூக்ஸ் 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட், பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி,அதன் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி, பின்னர் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி என பல வடிவங்களில் கிரிக்கெட் மாறி வந்திருக்கிறது.
தற்போது நவீன டிஜிட்டல் யுகத்தில் புதிய மாற்றங்களுடன் தன்னை மேலும் மாற்றிக்கொண்டு புதிய வடிவத்தில் முத்தாய்ப்பாய் வந்திருப்பது தான் "பகலிரவு டெஸ்ட் போட்டிகள்".
138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. அவுஸ்திரேலியா, - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான இந்த டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது.
பொதுவாக கிரிக்கெட்டில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பந்துகள் தான் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. கொக்கபுரா நிறுவனம் இதற்கென பிரத்தியேகமாக பந்துகளை தயாரித்துள்ளது. பிங்க் நிற பந்துகள் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் என பல சர்ச்சைகள் சுற்றியுள்ளன.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் அதன் சிறப்பம்சமே துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டுக்கும் சமவாய்ப்பு இருக்கும். பகலிரவு போட்டிகளை பொறுத்தவரையில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருந்தால் அதிரடியாக விளையாடும் துடுப்பாட்ட வீரர்களுக்கு மகிழ்ச்சிதான். பொதுவாக காலை நேரத்தில் முதல் ஒரு மணிநேரம் மைதானம் பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். ஆனால் இப்போட்டி மதியத்துக்கு மேல்தான் தொடங்கும் என்பதால் மைதானத்தில் வெயில் பட்டால், பிட்ச் கடினமாகிவிடும். இந்நிலையில் துடுப்பாட்டம் சிறிது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இப்போது டெஸ்ட் போட்டிகளை பார்க்க வரும் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. பகலிரவு போட்டிகளாக நடக்கும்போது மாலை நேரத்தில் நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றால் படிப்படியாக எல்லா நாடுகளிலும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைமுறைக்கு வரும். ஆக ஆஸி. -– நியூஸி. இடையேயான இந்த போட்டி உற்சாகமான டெஸ்ட் போட்டியாக, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தெரியுமா உங்களுக்கு?
* 138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பகல்–இரவாக நடத்தப்படும் முதல் டெஸ்ட் இது தான்.
*1877–ம் ஆண்டு மார்ச் மாதம் மெல்போர்னில் முதல்முறையாக அதிகாரபூர்வமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அரங்கேறியது. அதில் அவுஸ்திரேலியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் பிறகு டெஸ்ட் போட்டியின் நூற்றாண்டு கால கொண்டாட்டமாக 1977–ம் ஆண்டு அதே மார்ச்சில், அதே மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் சந்தித்தன. இதிலும் அவுஸ்திரேலியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வியப்புக்குரிய உண்மையாகும்.
*மொத்தம் 10 அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றன. இதுவரை 2,791 வீரர்கள் டெஸ்டில் பங்கேற்று இருக்கிறார்கள்.
*முதல் டெஸ்ட் வெற்றியை பெற அதிக போட்டிகளை எடுத்துக் கொண்ட அணி நியூசிலாந்து (42 டெஸ்ட்).
*இதுவரை 2,189 டெஸ்ட் போட்டிகள் (நாக்பூர் டெஸ்டையும் சேர்த்து) நடந்துள்ளன. அதிகபட்சமாக இங்கிலாந்து 965 டெஸ்ட் விளையாடி இருக்கிறது. இந்தியாவின் எண்ணிக்கை 494.
நீண்ட....நாள்....டெஸ்ட்....
ஆரம்ப காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில், இத்தனை நாட்கள் தான் போட்டி என்று வரையறை எதுவும் கிடையாது. காலவரையின்றி தொடர்ந்து நடைபெறும். வெற்றி அல்லது சமநிலை ஆகும் போது போட்டி நிறைவுக்கு வரும்.
இந்த வகையில் நீண்ட நாட்கள் நடந்த டெஸ்ட் எது தெரியுமா? 1939–ம் ஆண்டு டர்பனில் இங்கிலாந்து–தென்னாபிரிக்கா மோதிய போட்டி தான் அத்தகைய பெருமைக்குரியது.
இந்த டெஸ்ட் மார்ச் 3 ஆம் திகதி தொடங்கி 14 ஆம் திகதி வரை நீடித்தது. இடையில் இரண்டு நாள் ஓய்வு. ஒரு நாள் மழையால் நடக்கவில்லை.
எஞ்சிய 9 நாட்கள் போட்டி நடந்தும் முடிவு கிடைக்காதது தான் ஆச்சரியமானதாகும். இதில் 696 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 654 ஓட்டங்களை; எடுத்திருந்த போது, தேனீர் இடைவேளைக்கு பிறகு பலத்த மழை கொட்டியது.
இங்கிலாந்தின் வெற்றிக்கு மேற்கொண்டு 42 ஓட்டங்களே தேவைப்பட்டன. இதனால் மறுநாள் போட்டி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணி அணித் தலைவர்களும் இந்த டெஸ்டை சமநிலையில் முடிக்க ஒப்புக்கொண்டதாக அறிவித்தனர்.
ஏனெனில் அன்றைய தினம் இரவு 8.05 மணிக்கு இங்கிலாந்து அணி டர்பனில் இருந்து ரெயிலில் கேப்டவுனுக்கு சென்று அங்கிருந்து கடல்பயணமாக படகு மூலம் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த திகதிக்குரிய இங்கிலாந்தின் படகு போக்குவரத்தை தள்ளிவைக்க முடியாத நிலைமை இருந்ததால், வேறு வழியின்றி இந்த டெஸ்டை சமநிலை செய்ய நேரிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM