எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர், நாட்டில் மின்சார தடை ஏற்படாது என மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் களனி மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடச் சென்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டுவருகின்றோம் எனத் தெரிவித்த அமைச்சர், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த்த வேண்டுமெனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்க அலுவலகங்களில் அதிகளவில் வீண்விரயம் நடக்கின்றது. அதில் மின்சார பாவனையும் அடங்குகின்றது. ஆனால், இந்தத் தேசிய பிரச்சினைக்கு நாட்டுப் பற்றில்லாத பிரிவினர் ஆதரவு தருவதில்லை.இந்த மாதம் 10ஆம் திகதியளவில் மின்சார பிரச்சினைக்குத் தீர்வை வழங்கினாலும் தூரநோக்கில் நிரந்தரமான தீர்வு கிட்டும்வரை நாட்டுப் பற்றுடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.