737 ரக போயிங் விமான உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதற்கு போயிங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதியோப்பியா மற்றும் இந்தோனேசியா முதலான நாடுகளில் 737 ரக  போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாதாந்தம் 52 விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், இம் மாதம் நடுப்பகுதியளவில் அவற்றை  42ஆக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் எதியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த 737 மெக்ஸ் ரக போயிங் விமானம் சில நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 157 பேர் பலியாகினர்.

இதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்தோனேஷியாவின்  ஜகர்த்தாவிலிருந்து பயணமாக போயிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

இவ்வாறு இரண்டு பாரிய விபத்துக்கள் ஏற்பட்டு பெருமளவான உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்த நிலையில் தனது 737 ரக போயிங் விமான உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.