அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியுள்ளனர்.அதனை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்ததாவது,

“தமிழக அரசியல் சூழலில் நானும் மக்களும் தாமாக விழித்துக் கொண்டுள்ளோம். 

மாற்றம் எம்மிடம் இருந்து தொடங்கி, நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். ஒவ்வொரு தமிழன் தலை மீதும் ஒரு லட்ச ரூபாய் கடன் உள்ளது. இதை புரியாமல் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் வாங்கி ஏமாந்து விடாதீர்கள்.

 ஆட்சி பொறுப்பில் இருந்த கட்சிகள் திருடிய பணத்தில், இரண்டு தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்டங்களை செய்திருக்க முடியும். நாட்டில் ஊழல் என்ற நோய் ஏற்கனவே வந்துவிட்டதால், அதனை முழுமையாக அகற்ற வேண்டும். 

பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் என தமிழகத்தில் உள்ள 57 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசியல் வைத்தியம் பார்ப்பதற்கு அதற்கான மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த தகுதியின் அடிப்படையிலேயே எங்களது கட்சியினருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனால் நற்பணி மன்றத்தினர் யாரும் வருத்தப்படாமல் மகிழ்ச்சியுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாற்றம் வேண்டும். மனிதம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தின் வாக்களிக்க வேண்டும். அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு திட்டங்கள் வழங்க ஐநூறு பயிற்சி மையங்களை தொடங்குவோம் என தெரிவித்தார்.